
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கௌகாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டி முடிந்த கையோடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது காயத்தை சந்தித்த அவர், அதற்காக அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டிருந்தார். இதனால் அவர் தனது காயத்தில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்து பணியாற்றி வந்தார்.
இதனால் ஐபிஎல் தொடரின் முதல் சில ஆட்டங்களை அவர் தவறவிடுவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அவர் தனது பேட்டிங் உடற்தகுதிய நிரூபித்த காரணத்தால் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயாராக மட்டுமே விளையாடுவேன் என்று கூறியிருந்தார். இதனால் இந்த மூன்று போட்டிகளுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டிருந்தார்.