ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 45 ரன்கள் சேர்த்தனர்.
Trending
பின்னர் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்களை எடுத்திருந்த அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய இஷான் கிஷானும் அதிரடியாக விளையாட, மறுபக்கம் டிராவிஸ் ஹெட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த இஷான் கிஷான் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், அணியின் ஸ்கோர் வேகத்தையும் அதிகரித்தார்.
அதேசமயம் அவருடன் இணைந்த அதிரடியாக விளையாடிய நிதீஷ் ரெட்டி 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 34 ரன்னிலும் ஆட்டமிழக்க, மறுபக்கம் தொடர்ந்து பவுண்டரி மழை பொழிந்த இஷான் கிஷான் 45 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 11 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களைச் சேர்த்தது. ராயல்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சஞ்சு சாம்சன் ஒருபக்கம் அதிரட்டியான தொடக்கத்தைக் கொடுத்த நிலையில், மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு ரன் மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரியான் பராக் 4 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய நிதீஷ் ரானா 11 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 50 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து சஞ்சு சாம்சனுடன் இணைந்த துருவ் ஜூரெல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி வாந்த நிலையில் சஞ்சு சாம்சன் 26 பந்துகளிலும், துருவ் ஜூரெல் 27 பந்துகளிலும் என தங்களுடைய அரைசதங்களைப் பூர்த்தி செய்து அசத்தினர். அதன்பின் இருவரும் இணைந்து 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சஞ்சு சாம்சன் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 66 ரன்களிலும், துருவ் ஜூரெல் 5 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 70 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் ஜோடி சேர்ந்த ஷிம்ரான் ஹெட்மையர் மற்றும் ஷுபம் தூபே இருவரும் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி அணியின் ரன் ரெட்டை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இறுதியில் ஷிம்ரான் ஹெட்மையர் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 42 ரன்னில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷுபம் தூபேவும் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now