
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டதுடன் முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த பில் சால்ட் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்த நிலையில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய தேவ்தத் படிக்கலும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 4 ரன்களிலும், ஜித்தேஷ் சர்மா 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ராஜத் பட்டிதர் - குர்னால் பாண்டியா இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படிதர் 25 ரன்களில் நடையைக் கட்டினார்.