பேட்டிங்கில் நாங்கள் மேலும் சில ரன்களைச் சேர்த்திருக்க வேண்டும் - எம் எஸ் தோனி!
பேட்டர்களிடமிருந்து கொஞ்சம் எதிர்பார்க்கிறேன், ஏனெனில் இந்த போட்டியில் நாங்கள் மேலும் சில ரன்களைச் சேர்த்திருக்க முடியும் என்று சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரண் 88 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் 54 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தாலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது. இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த முதல் அணியாகவும் வெளியேறியது.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, “பேட்டிங்கில் முதல் முறையாக நாங்கள் போதுமான ரன்கள் எடுத்தோம் என்று நினைக்கிறேன். ஆனால் அது ஒரு சமமான ஸ்கோராக இருந்ததா? என்று கேட்டால் நான் கொஞ்சம் குறைவாக தான் இருந்தது என்று கூறுவேன். பேட்டர்களிடமிருந்து கொஞ்சம் எதிர்பார்க்கிறேன், ஏனெனில் இந்த போட்டியில் நாங்கள் மேலும் சில ரன்களைச் சேர்த்திருக்க முடியும் என்று நினைக்கிறேன்.
மேலும் ஃபீல்டிங்கில் நாங்கள் கேட்சுகளை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். டெவால்ட் பிரேவிஸும் சாம் காரனும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். கடைசி நான்கு பந்துகளை நாங்கள் விளையாடவில்லை, அதேபோல் 19ஆவது ஓவரிலும் நான்கு பேட்டர்கள் அவுட்டாகினோம். நெருக்கமான போட்டிகளில் 7 பந்துகளை நீங்கள் எதிர்கொள்ளவில்லை எனில் அது மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
சாம் கரண் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று முயற்சிகிறார். நாங்கள் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முயற்சிக்கும் போதெல்லாம், விக்கெட் மெதுவாக இருந்தது, அவருக்கு அது சற்று கடினமாக இருந்தது. ஆனால் இன்றைய போட்டிக்கான விக்கெட் இந்த போட்டியில் எங்கள் சொந்த மைதானத்தில் கிடைத்த சிறந்த விக்கெட்களில் ஒன்றாகும். அதனால் அவரால் என்ன செய்ய முடியும் என்பதை இப்போட்டியில் காட்டினார்.
Also Read: LIVE Cricket Score
மிடில் ஆர்டரில் டெவால்ட் பிரீவிஸ் இருப்பது அணிக்கு தேவையான உந்துதலை கொடுக்கிறது. அவரால் நல்ல பந்துகளை கூட பவுண்டரிக்கு அடிக்கும் சக்தி உள்ளது. மேலும் அவர் ஒரு சிறந்த ஃபீல்டரும் கூட, அதனால் அவர் அணிக்கு நல்ல ஆற்றலைக் கொண்டு வருகிறார். அவர் விளையாடும் விதத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் எதிர்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸின் ஒரு சொத்தாக இருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now