
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே தலா 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளன. இதையடுத்து ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஓவ்வொரு மூன்றாண்டுக்கும் ஒரு முறை ஐபிஎல் அணிகள் முழுவதுமாக கலைக்கப்பட்ட வீரர்கள் மெகா ஏலத்தை ஐபிஎல் நிர்வாகம் நடத்தி வருகிறது. அதன்படி ஒவ்வோரு அணிகளும் மூன்று அல்லது நான்கு வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மீதமிருக்கும் வீரர்களை ஏலாத்திற்கு அனுப்ப வேண்டும். அதன்பின் ஏலத்தில் வாங்கும் வீரர்களின் அடிப்படையில் புதிய அணியை உருவாக்க வேண்டும் என்பது நிபந்தனை.