ஐபிஎல் ஒளிபரப்பு உரிம மதிப்பு 50 பில்லியன் டாலராக உயரும் - அருண் துமால்!
ஐபிஎல் போட்டிகளுக்கான ஊடக உரிம மதிப்பு அடுத்த 20 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலராக (ரூ.4.15 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்ப்பதாக ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுக்கு ஒருமுறை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ரசிகர்களிடையே ஐபிஎல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மிகப் பெரும் விளம்பர வருவாயை ஈட்டக்கூடியதாக அது உள்ளது. இதனால், ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமம் பெறுவதில் ஊடகங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், 2043ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான ஊடக உரிம மதிப்பு 50 பில்லியன் டாலரைத் தொடும் என்று எதிர்பார்ப்பதாக அருண் துமால் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐபிஎல் உரிம மதிப்பு 6.2 பில்லியன் டாலரை (ரூ.51 ஆயிரம் கோடி) தொடும் என்று மதிப்பிடப்படுகிறது.
Trending
இதுகுறித்து பேசிய் அவா், “கடந்த 15 ஆண்டுகளில் ஐபிஎல் போட்டி கடந்து வந்த பாதையையும், தற்போது ரசிகா்களிடம் அதற்கு இருக்கும் மதிப்பையும் பாா்க்கையில், வரும் 2043-இல் ஐபிஎல் போட்டி ஒளிபரப்புக்கான உரிம மதிப்பு ரூ.4.15 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறேன்.
ரசிகா்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் கிரிக்கெட்டை புதிதாகவும், சிறப்பாகவும் மாற்ற வேண்டும். அதேபோல் அதன் தரத்தையும் அதிகரிக்க வேண்டும். ஒலிம்பிக்கில் சோ்க்கப்பட்டது, மகளிா் பிரீமியா் லீக் போட்டி தொடங்கியிருப்பது என கிரிக்கெட் சாா்ந்த வருவாய் இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது” என்று கூறியுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டில் ஐபிஎல் ஒளிபரப்பு உரிம மதிப்பு ரூ.8,200 கோடியாக இருந்த நிலையில், 2022 முதலான 5 ஆண்டுகாலத்துக்குரிய ஒளிபரப்பு மதிப்பு ரூ.48,000 கோடியாக இருப்பது நினைவுகூரத்தக்கது. அருண் துமல் மதிப்பீட்டின் படி பாா்த்தால், அமெரிக்காவின் என்எஃப்எல் போட்டிக்குப் பிறகு, உலகிலேயே அதிக மதிப்பு மிக்க லீக் போட்டியாக ஐபிஎல் உருவெடுக்கும். என்எஃப்எல் போட்டிக்கான ஒளிபரப்பு மதிப்பு 11 ஆண்டு காலத்துக்கு ரூ.9.16 லட்சம் கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now