
இந்தியா - அயர்லாந்து இடையேயான 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும் இஷான் கிஷனும் களமிறங்கினர். இஷான் கிஷன் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சஞ்சு சாம்சனுடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். ஹூடா மற்றும் சாம்சன் ஆகிய இருவருமே அதிரடியாக பேட்டிங் ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர்.
அதிரடியாக ஆடிய ஹூடா 55 பந்தில் சதமடித்தார். சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்தார். 2ஆவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 193 ரன்களை குவித்தனர். தென்னாப்பிரிக்க டி20 தொடரில் ஆட வாய்ப்பு கிடைக்காமல் தனக்கான வாய்ப்புக்காக காத்திருந்த ஹூடா, அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 57 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 104 ரன்களை குவித்தார்.