
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அசத்தியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 2ஆவது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 225 ரன்கள் என்ற இமாலய ரன் குவிப்பினை வழங்க அதனை துரத்திய அயர்லாந்து அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 221 ரன்கள் குவித்து வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 77 ரன்களையும், 3ஆவது வீரராக விளையாடிய தீபக் ஹூடா 104 ரன்கள் குவித்தும் அசத்தினார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் வாய்ப்பினைப் பெற்ற சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக அறிமுகமாகி 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
அதேபோன்று அவ்வப்போது இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு வரும் தீபக் ஹூடாவும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சதம் விளாசிய நான்காவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.