
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடருக்காக பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகும் முயற்சியில் இறங்கியுள்ளன. அந்தவகையில் பாகிஸ்தான் அணியானது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி டப்ளினில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் மற்றும் சைம் அயூப் இணை தொடக்க கொடுத்தனர். இதில் ரிஸ்வான் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அவருக்கு துணையாக சைம் அயூப்பும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் பாபர் அசாம் தனது அரைசதத்தைக் கடந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சைம் அயூப் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.