
அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவிலும் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் அயர்லாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர்.
இதில் அபாரமாக விளையாடி வந்த கேப்டன் பால் ஸ்டிர்லிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன் மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களை கடந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரூ பால்பிர்னி 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஸ்டிர்லிங்குடன் இணைந்த கர்டிஸ் காம்பெரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அயர்லாந்து அணி மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. அப்போது 34 ரன்களை எடுத்த நிலையில் கர்டிஸ் காம்பெர் ஆட்டமிழந்தர்.