
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் தாய்லாந்து மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து மகளிர் அணிக்கு சாரா ஃபோர்ப்ஸ் - கேப்டன் கேபி லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய கேபி லூயிஸ் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் சாரா ஃபோர்ப்ஸ் 29 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் லூயிஸுடன் ஜோடி சேர்ந்த ஏமி ஹண்டரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்த்தொடங்கியது.
அதன்பின் 14 பவுண்டரிகளுடன் 75 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் கேபி லூயிஸ் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய ஏமி ஹண்டரும் 76 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட்டும் 21 ரன்களுடன் நடையைக் கட்டினார். இறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லியா பால் தனது அரைசதத்தை பூர்த்தி செய்ததுடன், 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 67 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவருடன் இணைந்த விளையாடிய லாரா டெலானி 23 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.