
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை மகளிர் அணி இரண்டு டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது டப்ளினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து மகளிர் அணிக்கு ஏமி ஹண்டர் - கேபி லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் ஏமி ஹண்டர் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் கேபி லூயிஸுடன் இணைந்த ஓர்லா பிரெண்டர்காஸ்டும் போறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. பின்னர் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேபி லூயிஸும் 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் கேப்டன் லாரா டெலானி 25 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரெபேக்கா ஸ்டோகெல் 21 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து மகளிர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் பிரியதர்ஷினி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை மகளிர் அணிக்கு விஷ்மி குணரத்னே - ஹர்ஷிதா சமரவிக்ராமா ஆகியோர் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 30 ரன்கள் எடுத்திருந்த விஷ்மி குணரத்னே விக்கெட்டை இழந்தார்.