
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. அந்தவகையில், ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி முதல் முறையாக ஒருநாள் தொடரை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்த நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். பெர்த் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை அணி இர்ஃபான் பதான் தனது யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டுள்ளார். அதில், அவர் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷுப்மான் கில் மற்றும் ரோஹித் சர்மாவையும், மூன்றாவது இடத்தில் விராட் கோலியையும், 4ஆவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரையும், 5ஆவது இடத்தில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.
மேலும் அவர் தனது அணியில் ஆல் ரவுண்டரிகளாக நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் அக்சர் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாததன் காரணமாக அவரது இடத்தை நிரப்பும் வகையில் நிதிஷ் குமார் இருப்பார் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் தனது அணியில் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவை தேர்வு செய்துள்ள நிலையில், அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கு இந்த அணியில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.