
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை மகளிர் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று பெல்ஃபெஸ்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை மகளிர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் சமாரி அத்தபத்து முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்ஷிதா மாதவியும் 19 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த விஷ்மி குணரத்னே - ஹாசினி பெரேரா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விஷ்மி குணரத்னே சதமடித்து அசத்தினார். இதன்மூலம் இலங்கை மகளிர் அணிக்காக சதமடித்த இரண்டாவது வீராங்கனை எனும் சாதனையையும் அவர் படைத்தார்.
அதன்பின் அதிரடியாக விளையாடிய விஷ்மி குணரத்னே 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 101 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய ஹாசினி பெரேராவும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் பெரிதளவில் சோபிக்க தவறியதுடன் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் 3 விக்கெட்டுகளையும், அலனா டால்செல், அர்லீன் கெல்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.