
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியில் ரோஹித்துடன் தவான் தான் தொடக்க வீரராக ஆடுவார் என்பதை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலேயே இந்திய அணி உரக்க தெரிவித்துவிட்டது. அடுத்த ஆண்டு (2023) ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில், ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் ரோஹித்தின் கேப்டன்சியில் வலுவான ஒருநாள் அணியை கட்டமைக்கும் பணி தொடங்கிவிட்டது.
அந்தவகையில், ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ரோஹித்துடன் தவான் தொடக்க வீரராகவும், கேஎல் ராகுல் மிடில் ஆர்டரிலும் ஆடவுள்ளனர். இது பேட்டிங் ஆர்டரின் டெப்த்தை அதிகரிக்கும் என்பதாலும், ரோஹித்தின் வெற்றிகரமான ஓபனிங் பார்ட்னர் தவான் என்பதால் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதாலும் அவர் தான் தொடக்க வீரராக இறங்கவுள்ளார்.
ஆனால் டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ரோஹித்துடன் ராகுல் - இஷான் கிஷன் ஆகிய இருவரும் யார் தொடக்க வீரராக ஆடுவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இஷான் கிஷன் இளம் அதிரடி வீரர். அதேவேளையில், டி20 கிரிக்கெட்டில் ரோஹித்துடன் ராகுல் தான் தொடக்க வீரராக ஆடிவந்தார். ராகுல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் ஆடாததால் இந்த தொடரில் ரோஹித்துடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக ஆடிவருகிறார்.