
இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் டி20 தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்று வரும் 28ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. ஆனல் மழை பெய்ததால் தாமதமான இந்த போட்டி ஒரு வழியாக 8.30 மணிக்கு ஓவர்கள் குறைக்கப்படாமல் தொடங்கியது.
இதில் தன்னுடைய முதல் 5 போட்டிகளில் தொடர் தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் டெல்லி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு ஜேசன் ராய் – லிட்டன் தாஸ் ஆகிய வெளிநாட்டு அதிரடி தொடக்க வீரர்கள் களமிறங்கியது அந்த அணி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் மழையால் தார்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த பிட்ச் எதிர்பார்க்கப்பட்டது போலவே பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்து பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுத்தது.
அதற்கு பதில் சொல்ல முடியாத லிட்டன் தாஸ் 4 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் கடந்த போட்டியில் சதமடித்த போதிலும் இம்முறை டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் ஜேசன் ராய் நங்கூரமாக நின்ற நிலையில் எதிர்ப்புறம் அடுத்து வந்த கேப்டன் நிதிஷ் ராணா 4, மந்தீப் சிங் 12, நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் 6, சுனில் நரேன் 4 என முக்கிய வீரர்கள் அனைவரும் டெல்லியின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றனர்.