
90களில் உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்திய வெஸ்ட் இண்டீஸ் தற்பொழுது டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகளுக்கு தகுதி பெற முடியாத அளவுக்கு சரிந்து போய் இருக்கிறது. சமீபத்தில் ஜிம்பாப்வே நாட்டில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் படுதோல்வி அடைந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறி இருக்கிறது.
இப்படி ஒரு கடினமான நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் தமது உள்நாட்டில் வலிமையான இந்திய அணிக்கு எதிராக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. இரண்டு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட மூன்று தொடர்கள் நடக்க இருக்கின்றன. இதில் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டி டொமினிக்காவில் வருகின்ற 12ஆம் தேதி துவங்குகிறது.
இதற்காக 13 பேர் கொண்ட அணியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதில் கிர்க் மெக்கன்சி, அலெக் அதானஸ் என்ற இரண்டு புதிய வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பங்களாதேஷ் சென்ற வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியில் இடம் பெற்று மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார்கள்.