
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஜூலை 29-ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.
இந்த வெற்றிக்கு கடைசி நேரத்தில் 41* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக 15 ஓவர்கள் வரை அட்டகாசமாக பேட்டிங் செய்த கேப்டன் ரோஹித் சர்மா அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார். மேலும் அந்த 64 ரன்களால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார்.
இருப்பினும் சமீப காலங்களில் நல்ல தொடக்கத்தை பெற்றாலும் பெரிய ரன்களை எடுக்க முடியாமல் தடுமாறிய அவர் பழைய ஃபார்மின்றி தவித்து வந்தார். குறிப்பாக சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக அவர் ஒரு அரைசதம் கூட அடிக்காதது மும்பைக்கு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்தது.