
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடர் வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டம் செப்டம்பர் 2 அன்று இலங்கையின் கண்டியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் ஃபஹிம் அஷ்ரஃப் என்ற ஆல்ரவுண்டர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பியிருக்கிறார். உலக கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது.
அஷ்ரஃப் கடைசியாக 2021இல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். தற்போது கனடாவில் நடந்து முடிந்த குளோபல் டி20 தொடரிலும் அவரது செயல்பாடு பெரிய அளவில் இல்லை. அவர் ஐந்து போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகள் மற்றும் 21 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இருப்பினும் இந்தியாவில் நடைபெறும் முக்கியமான ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் தயாராகி வரும் நிலையில் அஷரஃப் சேர்க்கப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.