
வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால் அண்மையில் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினாவுடனான சந்திப்புக்குப் பிறகு தனது ஓய்வு முடிவை அவர் திரும்பப் பெற்றார். உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியிலும் இடம்பெற்றார். இருப்பினும், வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடனான மோதல் காரணமாக அவர் உலகக் கோப்பையிலிருந்து விலகினார்.
இந்த நிலையில், உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியிலிருந்து விலகிய தமிம் இக்பால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், “வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் மேலிட அதிகாரி ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். நீங்கள் காயத்துடன் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதைக் காட்டிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட வேண்டாம் என்று கூறினார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டிக்கு இன்னும் 12-13 நாள்கள் உள்ளன. அதற்குள் நான் முழு உடல் தகுதியுடன் இருப்பேன் என்றேன். அதற்கு பதிலளித்த அவர், நீங்கள் முதல் போட்டியில் விளையாடினாலும் பேட்டிங் ஆர்டரில் வேறு இடத்தில் மாறி இறங்க வேண்டியிருக்கும் என்றார். என்னுடைய 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பேட்டிங் ஆர்டர் வேறு இடத்தில் மாறி இறங்கியதே இல்லை.