
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி எடுத்த முடிவு ஒன்று பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏனெனில் இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்த ஷிவம் தூபே அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 53 ரன்களை விளாசி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். அதன்பின் இன்னிங்ஸின் கடைசி ஓவரின் போது அவருக்கு தலையில் பந்து தாக்கிய நிலையிலும், அடுத்த பந்தை எதிர்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதன்பின் இங்கிலாந்து அணி இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் ஷிவம் தூபேவுக்கு பதிலாக சப்ஸ்டிடியூட் வீரராக ரமந்தீப் சிங் இடம்பிடித்திருந்தார். அதன்பின் 10 ஓவர்கள் முடிவின் போது ஷிவம் தூபே ஃபீல்டிங் செய்ய வராததன் காரணமாக அவருக்கான கன்கஷன் சப்ஸ்டிடியூட் வீரராக ஹர்ஷித் ரானா விளையாடியதுடன் 4 ஓவர்கள் பந்துவீசி அதில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.