
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது.
166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ரஸல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு துணையாகினர்.
இந்த வெற்றி மூலம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 12 போட்டிகளில் 5 வெற்றிகள் 10 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் உயிர்ப்புடன் வைத்துக்கொண்டது கொல்கத்தா அணி. அடுத்துவரும் 2 ஆட்டங்களையும் கொல்கத்தா அணி கட்டாயம் வெல்வது அவசியமாகும்.