ஐபிஎல் 2022: உம்ரான் மாலிக்கை புகழந்த டேல் ஸ்டெயின்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிவரும் உம்ரான் மாலிக்கை, தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டெயின் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் 2022 தொடரில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் மோதின. டிஒய் பாட்டில் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று இந்த வருடம் பங்கேற்ற 3 போட்டிகளில் 2ஆவது வெற்றியை பதிவு செய்த அசத்தியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169/7 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 50 பந்துகளில் 68 ரன்களும் தீபக் ஹூடா 33 பந்துகளில் 51 ரன்களும் விளாசினர். ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் கலக்கிய தமிழகத்தின் வாசிங்டன் சுந்தர், நடராஜன் மற்றும் ரோமரியா ஷெபார்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
Trending
அதை தொடர்ந்து 170 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத் ஆரம்பம் முதலே லக்னோவின் அபாரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பரிசளித்து வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் கேன் வில்லியம்சன் 16 ரன்களிலும் அபிஷேக் சர்மா 13 ரன்களிலும் ஏமாற்ற அடுத்து வந்த ஐடன் மார்க்ரம் 12 ரன்களில் நடையை கட்டினார்.
இதனால் ஆரம்பத்திலேயே சரிந்து தடுமாறிய அந்த அணிக்கு நடுவரிசையில் களமிறங்கிய இந்திய வீரர் ராகுல் திரிப்பாதி 30 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 44 ரன்கள் விளாசி போராடி அவுட்டானார். அதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் 24 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 34 ரன்கள் எடுத்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் எடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 157/9 ரன்களை மட்டுமே எடுத்து ஹைதராபாத் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இதனால் இந்த வருடம் இதுவரை அந்த அணி பங்கேற்றது 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுகிறது.
முன்னதாக இந்த போட்டியில் ஹைதராபாத் தோற்ற போதிலும் அந்த அணிக்காக பந்துவீசிய ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஆரம்பம் முதலே மின்னல் வேகத்தில் பந்துவீசி லக்னோ பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை அளித்தார். குறிப்பாக பவர் பிளே ஓவரில் அவர் வீசிய முதல் ஓவரில் 148, 148, 142, 146, 146, 140 என தொடர்ந்து 140 கீ.மீ க்கும் மேற்பட்ட வேகத்தில் வீசி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
அதைவிட 2ஆவது ஓவரில் வெறித்தனமாக பந்துவீசிய அவர் 150 கிலோமீட்டர் வேகத்தில் லக்னோ பேட்ஸ்மேன்களை மிரட்டினார். அந்த ஓவரில் அவர் முறையே 149, 151, 152, 150, 145, 146 என்ற வேகத்தில் மிரட்டிய அவர் இந்தப் போட்டி முழுவதும் இதே போல பந்து வீசினார்.
இந்த வருடம் அவர் வீசிய பந்துகளில் மிகக் குறைந்த வேகமுடைய பந்து 140 கீ.மீ ஆகும். அதிவேகமான பந்து 152.8 ஆகும். அந்த வகையில் சராசரியாக அவர் ஒவ்வொரு பந்தையும் 147 என்ற மிரட்டலான வேகத்தில் வீசி வருவது பல ரசிகர்களையும் முன்னாள் வீரர்களின் கனத்தை கவர்ந்து இழுக்கிறது.
இதை பார்த்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் வியந்துபோய் பாராட்டினார். சச்சின் டெண்டுல்கர் போன்ற உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை தனது அபாரமான வேகத்தால் திணறடித்த அவர் தற்போது ஓய்வு பெற்று ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
அந்த நிலையில் நேற்று உம்ரான் மாலிக் வீசிய பந்துகளை பார்த்து வியப்படைந்த அவர் “150 கிலோ மீட்டர் அல்லது அதற்கு மேல் பந்துவீசும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் உம்ரான் மாலிக் தொடர்ச்சியாக 150 கிலோ மீட்டர் வேக பந்துகளை வீசி வருகிறார். அவரைப் பார்ப்பதற்கு மிகுந்த வியப்பாக உள்ளது” என போட்டியின் இடையே பாராட்டினார்.
இப்படி வேகத்தால் அசத்தும் அவர் தற்போது டேல் ஸ்டெய்ன் பயிற்சியில் முன்பைவிட கூடுதல் வேகமாக பந்துவீச தொடங்கியுள்ளார். இதை பார்த்த நட்சத்திரத் தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே, முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் போன்றவர்கள் அவரை சமூக வலைதளங்களில் மனதார பாராட்டி வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now