
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது டிசம்பர் 12-ஆம் தேதி நேற்று செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்திருந்த வேளையில் மழை குறுக்கிட்டது.
அதன் பின்னர் மழை நிற்க சற்று நேரம் பிடித்ததால் அங்கேயே இந்திய அணியின் பேட்டிங் நிறுத்தப்பட்டது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரிங்கு சிங் 68 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 56 ரன்களையும் குவித்திருந்தனர். பின்னர் மழை காரணமாக 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்க அணி 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த இலக்கினை எதிர்த்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது 13.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் சார்பாக துவக்க வீரர் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 49 ரன்களையும், மார்க்ரம் 30 ரன்களையும் குவித்து அசத்தினர்.