
நவீன கால கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் விராட் கோலி 2019க்குப்பின் ஃபார்மை இழந்து 3 வருடங்கள் தடுமாறியும் ஒரு முறை கூட உள்ளூரில் விளையாடாமல் கடைசி வரை சர்வதேச அளவிலேயே விளையாடி சதங்கள் அடித்து கம்பேக் கொடுத்தார். அதே போல தற்சமயத்தில் தடுமாறும் ரோஹித் சர்மாவும் உள்ளூர் போட்டிகளின் பக்கம் திரும்பாமல் கேப்டனாக இருப்பதால் தொடர்ந்து வாய்ப்பு பெற்று சர்வதேச அளவில் முக்கிய போட்டிகளில் சொதப்பி தோல்விக்கு காரணமாக அமைகிறார்.
மொத்தத்தில் ஃபார்மை இழந்தாலும் இந்தியாவின் போட்டிகள் நடைபெறவில்லை என்றாலும் இந்த 2 நட்சத்திர வீரர்களும் ஓய்வெடுக்கிறார்களே தவிர எப்போதுமே உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று விளையாடுவதில்லை. இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் உள்ளூர் அளவில் விளையாடினால் தான் ஃபார்மையும் மீட்டெடுக்க முடியும் அந்த தொடர்களின் தரமும் உயரும் என்று ஜாம்பவான் கபில் தேவ் கூறியுள்ளார்.
குறிப்பாக நட்சத்திர வீரர்கள் விளையாடும் போது அதை பார்த்து இளம் வீரர்களும் ஆர்வத்துடன் விளையாடுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் சீனியர்கள் இளம் வீரர்களுக்கு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து அடுத்த தலைமுறையை வளமாக உருவாக்க உதவ முடியும் என்று தெரிவிக்கும் அவர் சமீப காலங்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா எத்தனை முறை உள்ளூர் போட்டிகளில் விளையாடினார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.