
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வருகிற 11ஆம் தேதி கேப்டவுனில் துவங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பி வரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் விஹாரி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை ரசிகர்கள் பலரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.