நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன. இந்த நிலையில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நெல்சனில் ஊள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - டிம் ராபின்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கான்வே ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் டிம் ராபின்சன் 23 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவும் 26 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய டெவான் கான்வே 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிட டேரில் மிட்செல் வழக்கம் போல் அதிரடியாக விளையாடினார்.
மறுமுனையில் விளையாடிய ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னர், மிட்செல் ஹென்றி, கைல் ஜேமிசன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மேலும் அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செலும் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களையும் விளாசி 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூ ஃபோர்ட் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.