
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷன் 32 ரன்களும், டிம் டேவிட் 31 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 157 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், சாட்னர் மற்றும் துசார் தேஸ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இன்று மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா அவருக்கு நேரான ஒரு பந்தை வீச, அதை கேமரூன் கிரீன் பலம் கொண்டு நேராக வேகமாக அடிக்க, பந்து ஜடேஜாவை தாண்டி கொண்டு அம்பயரின் தலையை பதம் பார்க்க விரைந்தது. இந்த நேரத்தில் அனிச்சை செயல் போல உடனே செயல்பட்ட ஜடேஜா, பந்துக்கு கைகளை கொடுத்து, அபாரமாக தடுத்து, அதோடு அதை கேட்ச் ஆகவும் எடுத்து கேமரூன் கிரினை வெளியேற்றினார்.