
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. இதில் ஆல்ரவுன்டர் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் கவனம் ஈர்த்தது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் இந்திய அணி வெற்றி பெற கைகொடுத்தது. அதைத் தொடர்ந்து ஹாங்காங் அணியுடனான போட்டியில் மிரட்டலான ரன் அவுட் எடுத்து அணிக்கு பக்கபலமாக திகழ்ந்தார்.
இதனிடையே, வலது காலின் மூட்டு பகுதியில் ஏற்ப்பட்ட காயம் காரணமாக, அவர் நடப்பு ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது. மருத்துவர் கண்காணிப்பிலிருக்கும் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக ஆசிய கோப்பை தொடரில் அக்சர் படேல் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் ரவீந்திர ஜடேஜா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.