
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. மேலும் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வண்டர்சே தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளார்.
இப்போட்டியில் ஜெஃப்ரி வாண்டர்சே 10 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சிறப்பான ஆட்டத்திற்காக அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி இந்திய அணியின் முதல் ஆறு விக்கெட்டுகளான கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ஷிவம் துபே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் ஒரு சுழற்பந்து வீச்சாளராக, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சு வெளிப்படுத்திய வீரர்கள் வரிசையில் ஜெஃப்ரி வாண்டர்சே மூன்றாவது இடத்தை எட்டியுள்ளார். முன்னதாக கடந்த 1989 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 41 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது அதனை ஜெஃப்ரி வண்டர்சே முறியடித்துள்ளார்.