லார்ட்ஸ் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து விலகும் ஜூலன் கோஸ்வாமி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான லார்ட்ஸில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஜுலான் கோஸ்வாமி இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்தில் செப்டம்பர் 18, 21, 24 ஆகிய தேதிகளில் ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. செப்டம்பர் 10 முதல் 15 வரை 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரிலும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
Trending
இந்நிலையில் செப்டம்பர் 24 அன்று லார்ட்ஸில் நடைபெறும் 3ஆவது ஒருநாள் ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் 39 வயது ஜுலான் கோஸ்வாமி.
மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகள் (352) எடுத்த வீராங்கனை என்கிற சாதனையுடன் அவர் விடைபெறுகிறார். கடைசியாக நியூசிலாந்தில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் ஜுலான் விளையாடினார். அதன்பின் ஜூலை மாதம் இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.
கடந்த 2002 ஆம் ஆண்டு 19 வயது வீராங்கனையாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார் ஜுலான். கடந்த 20 வருடங்களில் 12 டெஸ்டுகள், 201 ஒருநாள், 68 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (252) எடுத்தவர் ஜுலான் தான். மேலும் இந்திய மகளிர் அணிக்காக இதுவரை ஆறு ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now