
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் சல்மான் அலி ஆகா அரைசதம் கடந்து அசத்தியதுடன் 51 ரன்களையும், ஷதாப் கான் 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் 27 ரன்னிலும், மார்க் சாப்மேன் 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தாலும், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் செஃபெர்ட் அரைசதம் கடந்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 6 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 97 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.