
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலத்தில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவை எந்த அணியும் ஏலத்தில் வாங்க ஆர்வம் காட்டவில்லை. ஐபிஎல் தொடரில் இதுவரை 50 போட்டிகளில் விளையாடியுள்ள பேர்ஸ்டோவ் அதில் 2 சதங்கள், 9 அரைசதங்கள் என 1,589 ரன்களைக் குவித்துள்ளார். அதிலும் கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக பேர்ஸ்டோவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும், அந்த அணி கூட அவரை வாங்க முன்வரவில்லை.
இப்படி ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படாம்ல் இருந்த பேர்ஸ்டோவ், களத்தில் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை மீண்டும் உலகுக்குக் காட்டியுள்ளார். அதிலும் தனது அசாதாரண பவர் ஹிட்டிங் மூலம் ரசிகர்களின் கவனத்தையும் அவர் ஈர்த்துள்ளார். அதன்படி அபுதாபி டி10 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி அணிக்காக விளையாடிய அவர் ஒரு ஓவரில் 27 ரன்களைச் சேர்த்து மிரட்டினார்.
அதன்படி மோரிஸ்வில்லே அணியைச் சேர்ந்த ஷராபுதீன் அஷ்ரப் வீசிய இன்னிங்ஸின் 6ஆவது ஓவரில் பேர்ஸ்டோவ் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்தார். அதிலும் பேர்ஸ்டோவ் டீப் மிட் விக்கெட்டுக்கு மேல் இரண்டு சிக்சர்களையும், தேர்ட் மேன் திசையில் ஒரு பவுண்டரியையும், பின்னர் டீப் மிட் விக்கெட் திசைக்கு மேல் மற்றொரு சிக்ஸரையும் விளாசிய நிலையில், மீண்டும் தேர்ட் மேன் திசையில் பவுண்டரியை விளாசினார்.