
கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்ற எட்டாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. அப்போது ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர், பேட்ஸ்மேன் ஷாருக்கான் அடித்த பந்தை கேட்ச் எடுத்தார். இதனால் துரதிஷ்டவசமாக ஜோஸ் பட்லர் விரலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய போட்டியில் ஜோஸ் பட்லர் ஓபனிங் செய்யவில்லை. ரவிச்சந்திரன் அஸ்வின் தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டார். பின்னர் விரலில் தையல் போட்டுக்கொண்டு பேட்டிங் செய்தார் பட்லர். பேட்டிங்கில் எதிர்பார்த்து அளவிற்கு செயல்படாமல், 19 ரன்களுக்கு அவுட் ஆனார்.
இந்நிலையில் ஜோஸ் பட்லர் விரலில் தையல் போடப்பட்டிருப்பதால், அடுத்த 72 மணி நேரங்களுக்கு அதை பிரிக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வருகிற 8ஆம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் லீக் போட்டியில் ஜோஸ் பட்லர் விளையாட மாட்டார் என்கிற தகவல்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பிலிருந்து வந்துகொண்டிருக்கின்றன.