
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வ்ரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது ரசிகர்களில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் இத்தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியானது விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடந்து முடிந்தது.
அதன்படி லாகூரில் நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலந்து அணியானது 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 47.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஷ் இங்கில்ஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 120 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இந்நிலையில் இப்போட்டியில் அவர் சதமடித்து அசத்தியதுடன் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார்.