
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அசத்தியது 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதனை தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கவாஜாவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். பின்னர் 141 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை இழந்தாலும், மறுமுனையில் தொடர்ந்து விளையாடிய உஸ்மான் கவாஜா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய அறிமுக வீரர் ஜோஷ் இங்கிலிஸும் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து அசத்த்தினார்.
பின் உஸ்மான் கவாஜா 232 ரன்களிலும், ஜோஷ் இங்கிலிஸ் 102 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 654 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அப்போது அலெக்ஸ் கேரி 46 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, ஜெஃப்ரி வேண்டர்சே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.