
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 04) க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளிலும் தங்கள் இடத்தை உறுதிசெய்யும். அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இலங்கை அணியும் கடுமையான சவாலை அளிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா இந்தப் போட்டியில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இந்தப் போட்டியில் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச கிரிக்கெட்டில் 550 விக்கெட்டுகள் என்ற இலக்கைத் தொடும் தென் ஆப்பிரிக்காவின் ஆறாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார். இது தவிர, இலங்கைக்கு எதிரான இப்போட்டியில் அவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 5ஆவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெறுவார்.