
இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடர் தொடங்குகிறது. அதில் களமிறங்கும் டாப் 10 கிரிக்கெட் அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளை காட்டிலும் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக நியூசிலாந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் 2007 டி20 உலகக்கோப்பை, உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி, முதல் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக களமிறங்கிய பெரும்பாலான ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி வாகை சூடி வருகிறது. இருப்பினும் இம்முறை அந்த அணியின் கேப்டன் மற்றும் நம்பிக்கை நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் விளையாடுவாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் குஜராதுக்காக விளையாடிய அவர் சென்னைக்கு எதிரான முதல் போட்டியிலேயே காயத்தை சந்தித்து வெளியேறினார்.
ஐபிஎல் தொடரில் சந்தித்த காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக்கோப்பை விளையாட மாட்டார் என்று ஆரம்பத்திலேயே செய்திகள் வெளியானது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே தன்னுடைய மகள் கையால் வீசிய பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் பயிற்சியை துவக்கிய வில்லியம்சன் தற்போது முதல் முறையாக நியூசிலாந்து அணியுடன் இணைந்து முதன்மையான பயிற்சிகளை துவங்கியுள்ளார். தற்சமயத்தில் குணமடைந்து வரும் அவர் மௌன்ட் மௌங்கனி நகரில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள நியூசிலாந்து அணியினருடன் இணைந்து கொஞ்சம் கொஞ்சமாக பேட்டிங் பயிற்சிகளை தொடங்கியுள்ளார்.