
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரில் 3 – 2 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்ததால் கேப்டனாக தலைமை தாங்கிய ஹர்திக் பாண்டியா டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வியை சந்தித்த முதல் கேப்டன் என்ற பரிதாப சாதனை படைத்தார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் வருங்கால கேப்டனாக கருதப்படும் அவர் கடந்த 2016இல் அறிமுகமாகி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு குறுகிய காலத்திலேயே முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக உருவெடுத்தார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்று விமர்சித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் கருத்தை பொய்யாக்கும் வகையில் 2018 நாட்டிங்ஹாம் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் எடுத்து அசத்திய அவர், கபில் தேவுக்கு பின் ஒரு வழியாக இந்தியாவுக்கு வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் அளவுக்கு அசத்தினார். ஆனால் அதன் பின் சந்தித்த காயத்தால் தடுமாறிய அவர் 2021 டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் அதிரடியாக கழற்றி விடப்பட்டார்.
இருப்பினும் மனம் தளராமல் காயத்திலிருந்து குணமடைந்து 2022 ஐபிஎல் கோப்பையை வென்று மீண்டும் கம்பேக் கொடுத்த அவர், அப்போதிலிருந்து வெள்ளைப் பந்து அணியில் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருங்கால கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ளார். இருப்பினும் கிரிக்கெட்டின் உயிர்நாடி என்ன டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான ஆர்வத்தையும் பயிற்சிகளையும் எடுக்காத அவர் 29 வயதிலேயே அதை மொத்தமாக புறக்கணித்து வருகிறார்.