
தென் ஆப்பிரிக்கா மகளிர் - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை லீக் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கைத் தேர்வு செய்து தென் ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தஸ்மின் பிரிட்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் லாரா வோல்வார்ட் - சுனே லூஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதங்களை அடித்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 61 ரன்களில் சுனே லூஸும், 9 ரன்களில் அன்னேரி டெர்க்சனும் விக்கெட்டை இழக்க, சதத்தை நெருங்கிய லாரா வோல்வார்ட்டும் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 90 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மரிஸான் கேப் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 68 ரன்களையும், நதின் டி கிளார்க் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 41 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ரன்களைக் கொடுத்தனர்.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சதியா இக்பால், நஷ்ரா சந்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து மழை பெய்ததன் காரணமாக, பாகிஸ்தான் அணிக்கு 20 ஓவர்களில் 234 ரன்கள் என்ற இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி தடுமாறியது.