நடப்பாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்பு இந்தியாவுடன் இணைந்து வேறு சில நாடுகள் தொடரை நடத்தின. இந்த வருடம் முதல்முறையாக மொத்த தொடரும் இந்தியாவில் மட்டுமே நடக்கிறது.
அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்த தொடர் நடக்கும் என்று சில தகவல்கள் வந்தன. ஆனால் பிசிசிஐ இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. இந்த வருட உலக கோப்பையில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்கின்றன. அதில் எட்டு அணிகள் உறுதியாகிவிட்டது. மீதமுள்ள இரண்டு அணிகளுக்கு குவாலிஃபையர் சுற்று நடத்தப்பட உள்ளது. வருகிற ஜூன் 18ஆம் தேதி ஜிம்பாப்வே-இல் குவாலிஃபையர் சுற்று துவங்குகிறது.
இதில் மொத்தம் எட்டு அணிகள் விளையாடுகிறது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஒன்று. இந்த சுற்றில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பட்டியலை அறிவித்தது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம். அத்துடன் ஜூன் மாதம் 5, 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுகிறது. இதற்கான அணியையும் அறிவித்துள்ளது.