
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஃபர்ஹான் - ஃபகர் ஸமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வேண்டர் டுசென் 15 ரன்களுக்கும், அப்துல்லா ஷஃபிக் 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த ஃபர்ஹான் - ஜஹந்தத் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் கடந்திருந்த ஃபர்ஹான் 6 பவுண்டரி, 3 சிகர்கள் என 62 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த சிக்கந்தர் ரஸா 18 ரன்களுக்கும், பிராத்வைட் 6 ரன்களுக்கும், ஷாஹீன் அஃப்ரிடி 12 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜஹந்தத் கான் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 45 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடில் லாகூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது.