
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதைனையடுத்து களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியிக்கு கைல் மேயர்ஸ் - ஆண்ட்ரிஸ் கஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கைல் மேயர்ஸ் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மைக்கேல் பெப்பரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான ஆண்ட்ரிஸ் கஸ் 27 ரன்களை எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த சரித் அசலங்கா மற்றும் அலிஷான் ஷராஃபு இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அசலங்கா 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அரைசதம் கடந்து அசத்திய அலிஷான் ஷராவும் 55 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து அதிரடியாக விளையாடி ரோஸ்டன் சேஸ் 22 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் களத்தை விட்டு வெளியேற, இறுதில் அபாரமாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது. எமிரேட்ஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.