
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில் ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குவதற்கு முன்பு பிசிசிஐ ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. இப்போது வெளிநாட்டு வீரர்கள் இல்லாத நிலையில் அணிகள் தற்காலிக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்றும், ஆனால் தற்போது தேர்வுசெய்யும் வீரர்களை அடுத்த ஏலத்திற்கு முன்பு தக்கவைக்க முடியாது என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடர் முடியும் வரை தற்காலிக மாற்று வீரர்களை அணிகள் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்றும் கூறிவுள்ளது.
அந்தவகையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ள காரணத்தால் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பெட்டர் குசால் மெண்டிஸை ரூ.75 லட்சத்திற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் காரணமாக அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகினார்.