
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதைத்தொடர்ந்து பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ஹைதராபாத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மேலும் அன்றைய தினமே நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் விளையாடவுள்ளது.