
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. எப்போதும் இங்கிலாந்து மைதானங்களுக்கும், விராட் கோலிக்கும் செட் ஆகாது என்பது இந்தத் தொடரின் மூலம் மீண்டும் ஒருமுறை தெரியவந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற விராட்கோலி 10 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 180 ரன்களை மட்டுமே அடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து 2018ஆம் ஆண்டில் அவர் சிறப்பாக விளையாடி இருந்தாலும் தற்போதைய தொடரில் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி சமீபத்திய டெஸ்ட் ரெக்கார்டும் அவருக்கு சாதகமாக இல்லை. முதலாவது டெஸ்ட் போட்டியின் போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி இந்த இரண்டாவது டெஸ்டிலாவது இழந்த தனது ஃபார்ம்மை மீட்டு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதல் இன்னிங்சில் சிறப்பான துவக்கம் கிடைத்தும் 42 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அதன்பிறகு தற்போது இரண்டாவது இன்னிங்சில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இந்நிலையில் விராட் கோலியின் இந்த சொதப்பலுக்கு என்ன காரணம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.