
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கிறது என்றாலே, இந்தியா தரப்பிலிருந்து பேட்ஸ்மேன்கள் பெயர்கள் முன்னிலையில் வைத்து விவாதிக்கப்படும். அதேபோல் பாகிஸ்தான் தரப்பில் இருந்து பந்துவீச்சாளர்கள் பெயர் முன்னிலையில் இருந்து வைத்து விவாதிக்கப்படும். இரு அணிகளும் எப்பொழுதும் இப்படி தனிப்பட்ட முறையில் பலம் கொண்ட அணிகளாக இருந்து வந்திருக்கின்றன. இந்தியா பேட்டிங்கை சார்ந்து இருக்கும். பாகிஸ்தான் பெரும்பாலும் பந்துவீச்சை சார்ந்து இருக்கும்.
உலக கிரிக்கெட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட்டை மட்டும் எடுத்துக்கொண்டால், அந்த நாடு வேகபந்துவீச்சாளர்களை உருவாக்கும் ஒரு தொழிற்சாலையாகவே இவ்வளவு ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. அந்த நாட்டில் இருந்து வரும் எந்த ஒரு வேகப்பந்துவீச்சாளரும், மிக அனாயசமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசுவார்கள்.
தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு கிடைத்திருக்கும் வேகப்பந்துவீச்சு தாக்குதல் கூட்டணி மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தை அனாயசமாக எட்டுகிறது. மேலும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.பாகிஸ்தான் அணியின் இப்போதைய வேகப்பந்துவீச்சு கூட்டணியின் தலைமை பந்துவீச்சாளராக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷாஹின் ஷா அப்ரிடி இருக்கிறார்.