
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது ரசிகர்களுக்கு விருந்து படைத்த தொடராக இருந்துள்ளது. ஏனெனில் ஒவ்வொரு போட்டியிலும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த இத்தொடரில் பல்வேறு சாதனைகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முன்னேறியுள்ளன.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ள வீரர்களைக் கொண்டு முன்னாள் வீரார்கள் தொடரின் சிறந்த அணியை கணித்துள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடனும் தனது ஐபிஎல் அணியை அறிவித்துள்ளார்.
அவரது அணியின் தொடக்க வீரர்களாக கேகேஆர் அணியின் சுனில் நரைனையும், சன்ரைசர்ஸ் அணியின் டிராவிஸ் ஹெட்டையும் தேர்வு செய்துள்ள அவர், மூன்றாம் இடத்திற்கு ஆர்சிபி வீரர் விராட் கோலியைத் தேர்வு செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து நான்காம் வரிசையில் ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சனையும், ஐந்தாம் இடத்தில் லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரனையும் தேர்வு செய்துள்ளார்.