
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த் வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணி எது என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டம் நேற்று நடைபெற்றது .
இப்போட்டியில் கொனார்க் சூர்யாஸ் ஒடிசா அணியும், தோயம் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஒடிசா அணிக்கு ரிச்சர்ட் லெவி மற்றும் முனவீரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிச்சர்ட் லெவி 6 ரன்களிலும், மனவீரா 18 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நவீன் ஸ்டெவர்ட்8 ரன்களுக்கும், யூசுஃப் பதான் 12 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த கெவின் ஓ பிரையன் மற்றும் கேப்டன் இர்ஃபான் பதான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியி இறங்கினர்.
இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெவின் ஓ பிரையன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 80 ரன்களை எட்டியது. அப்போது 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கெவின் ஓ பிரையன் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இர்ஃபான் பதான் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 49 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் ஒடிசா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களை மட்டுமே எடுத்தது.