
இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது அறிமுக வீரராக களமிறங்கிய திலக் வர்மா தன்னுடைய அபாரமான ஆட்டத்திறமை காரணமாக கிரிக்கெட் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டார். தனது அறிமுக தொடரிலேயே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவரை உடனடியாக உலகக் கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
கடந்த 2020ஆம் ஆண்டிற்கான அண்டர் 19 உலக கோப்பை அணியில் இடம் பெற்று விளையாடியவர் திலக் வர்மா. கடந்த இரண்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டார். தான் சந்தித்த இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் சிக்ஸர் அடித்து கிரிக்கெட் உலகையே அதிரசெய்தார். அதிரடி ஆட்டத்தோடு பக்குவமும் கலந்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆடிய இவரது முதிர்ச்சி பல கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் ஆசியக் கோப்பை தொடரிலும் இவரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் நிச்சயமாக நடைபெற இருக்கின்ற உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியிலும் இடம் பெறுவார் என பல முன்னால் வீரர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.